இலங்கை 15 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் தொடரை வென்று சாதனை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 29, 2024

இலங்கை 15 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் தொடரை வென்று சாதனை

சுற்றுலா நியூஸிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றி 15 ஆண்டுகளின் பின் நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

மூன்றாவது ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் (2023 – 2025) அங்கமாக நடைபெற்ற குறித்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் முன்னிலை வகித்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸூக்காக 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. 

துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் குவித்தனர்.

பதிலுக்கு தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 88 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. 

பந்து வீச்சில் பிரபாத் ஜெயசூரிய 6 விக்கெட்களையும், அறிமுக போட்டியில் களமிறங்கிய சுழற்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதன் அடிப்படையில் 514 ஓட்டங்கள் பின்தங்கியதால் பலோஓன் முறையில் மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 199 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது.

இந்நிலையில் இன்று காலை போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் தொடர்ந்த சில நிமிடங்களில் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. மறுமுனையில் ஆடிய க்ளேன் ப்ளிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிக்க இறுதியில் நியூசிலாந்து அணி 360 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 26 ஆண்டுகளின் பின் நியூசிலாந்து அணியுடன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே காலி மைதானத்தில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியிருந்தது.

இலங்கை அணியின் 2ஆவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் அறிமுக போட்டியில் ஆடிய நிஷான் பீரிஸ் 6 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment