நாட்டின் எட்டு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றினர் - ஸ்ரீநேசன் - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2024

நாட்டின் எட்டு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றினர் - ஸ்ரீநேசன்

இந்நாட்டில் 8 ஜனாதிபதிகள் தேர்தல்கள் மூலமாக பதவிக்கு வந்தார்கள். இவர்கள் சிங்கள மக்களுக்கான சிங்கள ஜனாதிபதிகளாகவே நடந்து கொண்டார்கள். தமிழர்களுக்கு மேலதிகமாக பிரச்சினைகளை உருவாக்கினார்களேயன்றி இனப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இலங்கையில் 1978 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்நாட்டில் 8 ஜனாதிபதிகள் தேர்தல்கள் மூலமாக பதவிக்கு வந்தார்கள். இவர்கள் சிங்கள மக்களுக்கான சிங்கள ஜனாதிபதிகளாகவே நடந்துகொண்டார்கள். தமிழர்களுக்கு மேலதிகமாக பிரச்சினைகளை உருவாக்கினார்களேயன்றி, இனப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை.

அந்த வகையில், 46 ஆண்டு காலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட 8 ஜனாதிபதிகளும் இடைக்காலத்துக்காக பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட இரு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.

தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி ரணில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை. இதற்கான மக்களின் அறவழிப் போராட்டத்தினை அவர் மதிக்கவில்லை. இப்போது கூட அவரால் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

சட்டவிரோதமாக குடியேறிய அயல் மாவட்டக் குடியேறிகளைக் கூட ஜனாதிபதியால் வெளியேற்ற முடியவில்லை.

மேலும், இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கான திட்டம் ரணில், சஜித், அநுர ஆகியோரிடம் இல்லை. இப்படியிருக்க, அதனை நன்கறிந்த பின்பும் சில்லறையான சலுகைகள் அல்லது எதிர்காலத் தனிப்பட்ட தேவைகள் அல்லது நட்புக்காக தமிழர்கள் எந்த வகையில் வாக்களிக்க முடியும்.

இவர்கள் ஜனாதிபதியானால் தரக்கூடியது இருவர் அல்லது மூவருக்கான அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகள் மட்டுமேதான். அதன் பின்னர் கூட்டுப் பொறுப்பு என்ற கட்டுக்குள் இருந்துகொண்டு தலையாட்டிக்கொண்டு, ஸ்ரீலங்கா அரசுக்காகவும், அந்த அரசாங்கத்துக்காகவும் செயற்படவே முடியும்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிச் சிந்திக்கவும் முடியாது. செயற்படவும் முடியாது.

தமிழர் விடுதலை இயக்கங்களில் இருந்து ஶ்ரீலங்கா தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்ட டக்ளஸின் ஈ.பி.டி.பி, பிள்ளையானின் த.ம.வி.பு கட்சி என்பவற்றால் வடக்கு, கிழக்கு மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எதனையும் செய்ய முடியவில்லை.

அதையும் விட சாதாரண கல்முனை வடக்குப் பிரதேச செயலகம், மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்க முடியவில்லை. இப்படியான நிலையில் தனிப்பட்டவர்களின் அமைச்சர் கனவுகள் நிறைவேறுமேயன்றி தமிழர்களின் எப்பிரச்சினையும் தீராது என்பதே வரலாற்றுப் படிப்பினையாகும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment