(எம்.ஆர்.எம்.வசீம்)
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொண்டால் வரி வீதத்தை அதிகரிக்க நேரிடும் என மக்களை எச்சரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவின் சந்தர்ப்பவாத வாக்குறுதியை அரச ஊழியர்கள் நம்பப்போவதில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அரச ஊழியர்கள் தங்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு தெரிவித்து கடந்த சில மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக அதிபர் ஆசிரியர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டுவந்தனர். ஆனால் அவர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேநேரம் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டால் வரி வீதத்தை 20 வீதம் வரை அதிகரிக்க நேரிடும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு தெரிவித்து மக்களை எச்சரித்த ஜனாதிபதி தற்போது அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவிக்கிறார்.
ஜனவரியாகும்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கமாட்டார் என்பதாலே அவர், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவித்து வருகிறார். ஜனாதிபதியின் இந்த ஏமாற்று வாக்குறுதியை அரச ஊழியர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை.
10 ஆயிரம் ரூபா வழங்க முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, எப்படி 25 ஆயிரம் வழங்குவார் என கேட்கிறோம். எப்படியாவது அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளவே ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.
ஆனால் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சஜித் பிரேமதாசவுக்கே அரச ஊழியர்கள் இந்த முறை தங்களின் வாக்குகளை வழங்குவார்கள் என்பது நிச்சயமாகும் என்றார்.
No comments:
Post a Comment