சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம் : 24 மணி நேரத்தில் 7 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, August 26, 2024

சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம் : 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

நேற்றையதினம் (25) பிற்பகல் இஹல கந்த பிரதேசத்தில் உள்ள எத்தா வெட்டுனு வலே எனும் பகுதியில் நீராடச் சென்ற பொதுச் சுகாதார பரிசோகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மொரட்டுவை மற்றும் எகொடஉயன பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகங்களில் கடமையாற்றும் 26 மற்றும் 28 வயதுடைய அச்சுவேலி மற்றும் ஓந்தாச்சிமடம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கி இவர்கள் மீட்கப்பட்டு எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக இத்தபான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் 4 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் நேற்று நீராட சென்ற நிலையில் 2 பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் இத்தபான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய நபரொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாரவில சிலுவை தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடலில் இளைஞர்கள் குழுவுடன் நீராடச் சென்ற 18 வயதுடைய இளைஞர் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் போகமுவ தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 9 வயது, 5 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் 36 வயதான தாய் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை, பிள்ளைகளில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் தாயையும், மற்ற பிள்ளையையும் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில், காணாமல்போன தாய் மற்றும் பிள்ளையின் சடலங்கள் இன்று (26) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment