ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திர மூளை காலம் தாழ்த்த எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கும் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 28, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திர மூளை காலம் தாழ்த்த எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கும் - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு இறுதிக்கட்டம் வரை சென்று நடத்தப்படாமல் கைவிடப்பட்டதோடு, அதேபோன்று நிலைமை ஜனாதிபதித் தேர்தலுக்கும் ஏற்படும் என்று சந்தேகிக்கின்றோம். காரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திர மூளை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க தயங்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தேர்தல் இடம்பெறவில்லை.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலிலும் இடம்பெறக்கூடும். ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்த முடியுமா என்று ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்ததன் காரணமாகவே அவரது கட்சி சகாக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு அனைவரையும் குழப்பி வந்தனர்.

எவ்வாறிருப்பினும் நீதிமன்றம் அந்த அனைத்து முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இப்போதும் ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு பயம். அவர் தேர்தலுக்கு தயாராக இல்லை. ஆனால் எந்தவொரு காரணத்தைக் கூறியும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அவருக்கு சட்டத்தில் இடமில்லை.

மறுபுறம் அவர் நீதிமன்றத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் ஜனாதிபதியாகவும் இருக்கின்றார். பொலிஸ்மா அதிபர் நியமனம் முறையாக இடம்பெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் தனது தேவைக்காக அவரையே தொடர்ந்தும் பொலிஸ்மா அதிபராக வைத்திருப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.

சி.டி.விக்கிரமரத்னவை 3 சந்தர்ப்பங்களில் பதில் பொலிஸ்மா அதிபராக நியமித்ததை மறந்து விட்டு, தற்போது பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

தேர்தல் அலுவலகத்தை திறப்பதற்கு முன்னர் சென்று வரிசையில் காத்திருந்து முதன் முதலாக கட்டுப்பணத்தை செலுத்தி தான் ஒரு வேட்பாளர் என்றும், எனவே தன்னால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்றும் ரணில் தத்ரூபமாகத் தெரிவித்துள்ளார். இதுவே அவரது தந்திரமாகும். நாட்டில் தொடர்ச்சியாக முரண்பாடுகளை ஏற்படுத்தவே ஜனாதிபதி ரணில் முயற்சிக்கின்றார் என்றார்.

No comments:

Post a Comment