(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் காலத்தில் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டிய முறைமை குறித்து விசேட சுற்றறிக்கை இவ்விரு நாட்களுக்குள் வெளியிடப்படும். சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கு அரச சேவையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை தேர்தல் மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அரசஊழியர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் விசேட சுற்றறிக்கை இவ்விரு நாட்களில் வெளியாகும். தேர்தல் செயற்பாடுகளுக்கு சகல அரச ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் பணிகளின்போது பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் எண்ணிக்கை மற்றும் செலவுகள் தொடர்பான விபரங்களை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது. அரச அச்சகத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு திறைசேரிக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
வேட்பு மனுக்கள் எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கு அமைய பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அல்லது செயலாளர்கள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளோம்.
ஊடக பிரச்சாரம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடவுள்ளோம். சகல வேட்பாளர்களுக்கும் நியாயமான வகையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

No comments:
Post a Comment