அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் அதிகூடிய பதவிக் காலத்தை 5 வருடங்களாக குறைக்காமைக்கு தனது தாமதமே காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன அதிருப்தி வௌியிட்டுள்ளார்.
ஜனாதிபதி நேற்று (19) காலியில் ஆற்றிய உரைக்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன இன்று (20) அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் அதிகூடிய பதவிக் காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக குறைக்காமல் விட்டமைக்கு ஜயம்பதி விக்ரமரத்னவின் அனுபவ குறைவினால் ஏற்பட்ட தவறே காரணம் என நேற்று ஜனாதிபதி கூறினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு விடாமல் தயாரிப்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதியாக அமைந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிப்பதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான 49 சிவில் அமைப்புகளுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்குவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டதாக அவர் கூறினார்.
அதற்கு மறுதினம் ஜாதிக ஹெல உருமய கட்சியுடன் மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செல்லும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தத்திற்கும் செல்வதில்லை என உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே அதிகூடிய பதவிக் காலம் 5 வருடங்களாக குறைக்கப்படவில்லை என ஜயம்பதி விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, தாம் உள்ளிட்ட குழுவினர் திருத்தத்தை தயாரித்து அரசியலமைப்பு விவகாரத்திற்கு பொறுப்பாகவிருந்த பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவிடம் சமர்ப்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 83ஆவது பிரிவை திருத்துவதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு அவசியமெனவும் ஜயம்பதி விக்ரமரத்ன தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
19ஆவது திருத்தத்தை மேற்கொள்ளும்போது, தயாரிக்கப்பட்ட அனைத்து சட்டமூலங்களையும் அமைச்சரவை உப குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே சட்டவரைஞர்களுக்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டமா அதிபருடன் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியதாகவும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆவது திருத்தத்தை ரணில் விக்கிரமசிங்கவே சமர்ப்பித்ததாகவும் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டபோது அரசாங்கம் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர் எவ்வித திருத்தத்திற்கும் மக்கள் கருத்துக் கணிப்பும் அவசியம் இல்லை என கூறியதாகவும் ஜயம்பதி விக்ரமரத்ன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்த பகுதிகள் பாராளுமன்றத்தில் திருத்தப்பட்டதாகவும் சில சரத்துக்கள் கைவிடப்பட்டதாகவும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்.
இதன்படி, மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செல்லாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிக்கு அமையவே அரசியலமைமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment