அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கண்காணிக்க தீர்மானம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 20, 2024

அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கண்காணிக்க தீர்மானம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கண்காணிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் திகதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டங்களை நடாத்துதல், பதாதைகளைக் காட்சிப்படுத்துதல், துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் உள்ளிட்ட பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இருப்பினும் இத்தகைய தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் பாராமுகமாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கண்காணிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச அதிகாரிகள் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு அரச ஊழியர்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் சில அரச ஊழியர்கள் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை ஆதரித்து செயற்படுவதானது மனித உரிமை மீறலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச ஊழியர்களும், அரச கட்டமைப்புக்களும் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment