சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக தற்போது கடமையில் உள்ள வைத்தியர் ரஜீவை, வைத்தியர் அர்ச்சுனா வைத்திய அத்தியட்சகருடைய கதிரையில் இருந்து எழுப்பியதுடன், தான் அந்த கதிரையில் அமர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (08) சாவகச்சேரியில் இருந்து சுகாதார அமைச்சின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இன்று (15) மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்திருந்தபோது, தானே வைத்திய அத்தியட்சகர் எனக்கூறி வைத்தியர் ரஜீவை அத்தியட்சகர் கதிரையில் இருந்து எழுப்பிவிட்டு தான் அக்கதிரையில் இருந்து தான் கடந்த தினங்களில் எடுத்த விடுமுறை தொடர்பான விபரங்களை விடுமுறை புத்தகத்தில் பதிந்ததுடன், வைத்திய அத்தியட்சகராக இருந்த காலத்தில் கிடைக்கப் பெற்ற உத்தியோகபூர்வ கடிதங்களையும் பார்வையிட்டு, கையொப்பமிட்டு விட்டு வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
மேலும், இது தொடர்பாக இராமநாதன் அர்ச்சுனா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இப்போதும் நானே வைத்திய அத்தியட்சகர் எனது கடமைகளையே வைத்தியர் ரஜீவ் மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.
நேற்றுடன் எனது விடுமுறை முடிந்து விட்டது. நானே இப்போதும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர். வைத்தியர் ரஜீவ் எனது கடமைகளையே மேற்கொள்கிறார். வைத்தியத்துறைக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு விளைவிப்பது எனது நோக்கம் அல்ல. என்னை வைத்தியசாலைக்குள் நடமாட விடாது தடுக்க எவருக்கும் உரிமை இல்லை.
நாளை (16) வடக்கிற்கு வரவுள்ள சுகாதார அமைச்சர் அமைச்சின் செயலாளருடைய கையொப்பத்துடன் சட்டப்படி இடமாற்றல் கடிதத்தை தந்தால் ஏற்றுக் கொள்வேன்.
நான் இந்த வைத்தியசாலையில் விதைத்தவற்றை அறுவடை செய்யட்டும். வைத்தியசாலைக்கு தேவைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆளணியை அதிகரிப்பதுடன் சத்திர சிகிட்சைப் பிரிவையும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்தோடு அரசியலமைப்புச் சட்டத்தின்படி கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. நான் செய்தது தவறு எனில் ஏனைய வைத்தியர்கள் செய்வதும் தவறுதான். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்துமே வழமை போன்று இடம்பெறுகின்றன என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் ரஜீவ், வைத்தியர் அர்ச்சுனா தன்னுடைய காலப்பகுதியில் ஏற்கனவே வருகை தந்திருந்த கடிதங்களை பார்வையிட்டு இன்று அதில் கையொப்பமிட்டதுடன், தான் கடந்த தினங்களில் எடுத்துக் கொண்ட விடுமுறை தொடர்பான விபரங்களையும் விடுமுறைப் புத்தகத்தில் எழுதி விட்டு தொடர்ச்சியாக என்னை கடமையாற்றுமாறு கூறிச் சென்று விட்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் நியமனம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
அவர் மத்திய சுகாதார அமைச்சில் அந்தக் கடிதத்தைக் கோரிய போதிலும் அவருக்கு அது கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். என்னிடம் அதனுடைய பிரதி இருந்தது. அதனை வழங்கிய போதிலும் அவர் எடுத்துச் செல்லவில்லை.
தற்போது வைத்தியசாலைப் பணிகள் வழமை போன்று இடம்பெறுகிறது. வைத்தியர்களும் வழமையான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். நாம் தொடர்ச்சியாக வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்பட்டது.
முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவின் வருகைக்காக இன்று காலை வைத்தியசாலை முன்றலில் கூடி நின்றவர்களை சாவகச்சேரி பொலிஸார் அங்கிருந்து விரட்டியதுடன், அதில் இருவரை கைது செய்தனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கடந்த 07ஆம் திகதி இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண வைத்தியர் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்த பதில் வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்தார்.
அந்நிலையில் வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக 07ஆம் திகதி இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் 08ஆம் திகதி அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டன.
அந்நிலையில் 08ஆம் திகதி , நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அர்ச்சுனா, தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் என கூறி சென்றார். வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது.
அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வட மாகாண சுகாதார திணைக்களத்தால், வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
அந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர், பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார்.
இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்பட்டதுடன், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடியவேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment