பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்தை அது பாதிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஒரே சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கும் தேர்தல் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், எந்த சந்தர்ப்பத்திலும் எந்த தேர்தலையும் நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகவே உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான நிதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன் ஆரம்ப நடவடிக்கைகளுக்கான செலவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2015 ஆம் ஆண்டு தேர்தல் செலவுக்காக அரசாங்கத்தினால் 1.7 பில்லியன் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்காக 4.9 பில்லியன் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் தேர்தலுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க அச்சகம் உட்பட சம்பந்தப்படும் அனைத்து நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
நீதி, நேர்மை சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment