நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் “டொப்பாஸ்” பகுதியில் அதி சொகுசு பஸ் விபத்து ஒன்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த பஸ் விபத்தில் சிக்கிய 40 பயணிகள் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் பஸ் விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 07 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும், ஏனைய 33 பேர் சாதாரண சிகிச்சை பிரிவிலும் அனுமதித்துள்ளதாக நுவரலியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா தனியார் விடுதி ஒன்றிலிருந்து 42 பயணிகள் திருகோணமலைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு அதி சொகுசு பஸ்ஸில் பயணித்துள்ளனர்.
குறித்த பஸ் நுவரெலியா கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் சென்றபோது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதேநேரத்தில் பஸ்ஸை செலுத்திய சாரதி சாமர்த்தியமாக வீதி பாதுகாப்பு தடையில் மோதி பாரிய விபத்தை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆ.ரமேஸ்
No comments:
Post a Comment