(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாகவும், பெண் உறுப்பினர்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு தயார் என்றே கருத முடியும். பாலின சமத்துவம் தொடர்பில் மேற்குலம் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தேவை கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பாலின சமத்துவம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அரசியலமைப்புக்கு அமையவே நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளது.
பெண் சமத்துவத்துக்கும், மாற்று பாலினத்தவர்களுக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெண் சமத்துவம் என்று குறிப்பிட்டுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்குள் மாற்று பாலினத்தவர்களை உள்ளடக்குவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.
பாலின மாற்றம் என்பது மேற்குலகத்தில் நவீன கலாச்சாரமாக காணப்படுகிறது. மேற்குலக நாடுகளில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் பாலினம் தொடர்பில் பிள்ளைகளிடம் அனுமதி கேட்கப்படுகிறது.
விருப்பமாயின் ஆண் பிள்ளை பெண்ணாகவும், பெண் பிள்ளை ஆணாகவும் மாற்றயமடையலாம். பாலுறுப்பு மாற்று சத்திர சிகிச்சைக்காக 4000 டொலர் செலவாகும் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்குலகம் அவர்களின் கலாச்சாரத்தை அங்கு வைத்துக் கொள்ளட்டும்.
இலங்கை பௌத்த நாடு. பௌத்த கோட்பாடுகளில் திருநங்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவர்களின் நலன் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
அதற்காக பெண் சமத்துவம் என்பதற்கும் இவர்களை உள்ளடக்கக்கூடாது, அவ்வாறான நிலை ஏற்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதையே உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாலின சமத்துவம் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாகவும், பெண் உறுப்பினர்கள் ஆண்களாகவும் மாற தயாராக உள்ளார்கள் என்பதையே கருத முடியும். இந்த சட்டமூலம் பிறப்பால் ஆண்களையும், பெண்களையும் இல்லாத பிரச்சினைக்கு கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment