அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு மதிப்பீடாக 875 கோடி ரூபா ஒதுக்கீடு ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 19, 2024

அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு மதிப்பீடாக 875 கோடி ரூபா ஒதுக்கீடு !

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசினால் 2024 ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு மதிப்பீடாக 875 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட குறை நிரப்பு மதிப்பீட்டில் இத்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், வெளிநாட்டு உதவியுடன் தொடங்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களை கடன் மறுசீரமைப்பு செயன்முறை முடியும் வரை நிறுத்த வேண்டியதாலும், கிராம மட்டத்தில் செயற்படுத்தப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்களின் பலன்களை கிராமப்புற சமூகங்கள் இழந்துள்ளன.

கிராமிய பாதைகள், பாலங்கள், சிறு குளங்கள், கால்வாய்கள் அபிவிருத்தி, கிராமிய தொழில்முயற்சி அபிருத்தித் திட்டங்கள், கிராமிய பாடசாலைகள், மருத்துவமனைகள், குறைந்த வருமானம் கொண்ட வீடுகள் மற்றும் கிராமிய நீர் வழங்கல் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வித தாமதமுமின்றி நிறைவேற்றக் கோரி கிராமப்புற மக்களிடமிருந்தும், பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் பல்வேறு முறையீடுகள் பெறப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக, கருத்திட்டம் 6 "தேசிய முன்னுரிமைகளுக்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பு", நிகழ்ச்சித்திட்டம் 2 - செலவினத் தலைப்பு 001 இன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், உப கருத்திட்ட இல. 003 இற்கு ஏனைய நோக்கக் குறியீடுகளின் எதிர்பார்க்கப்பட்ட சேமிப்புக்களிலிருந்து ரூபா 8 75 கோடி ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த அரசாங்கச் செலவுகள், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் அரசாங்கக் கடன்கள் ஆகியவற்றில் எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாமல் இந்தப் பரிமாற்றத்தை செயல்படுத்தும் நோக்கத்துடன், உப கருத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உப கருத்திட்டங்களாக, மாகாணசபைகள் ஊடாக அபிவிருத்தி,இலங்கையின் தேசிய முத்திரை, அனுராதபுரம் மகா விகாரை பல்கலைக்கழகத்தை நிறுவுதல், அனுராதபுரத்தில் சர்வதேச பௌத்த நூலகம் ஒன்றை நிறுவுதல், கண்டியில் பௌத்த நாகரிகம் தொடர்பான அருங்காட்சியகத்தை நிறுவுதல் ,ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்துதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment