உயர் நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலைமை ஏற்படும், அரசியலமைப்பு பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும் - விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 19, 2024

உயர் நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலைமை ஏற்படும், அரசியலமைப்பு பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும் - விஜயதாஸ ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயர் நீதிமன்றத்தின் தடையுத்தரவால் நீதியரசர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் உயர் நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலைமை ஏற்படும். சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடு தோற்றம் பெறுவதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்தி உறுதியான தீர்மானத்தை சாதகமான முறையில் எடுக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நீதித்துறை புனிதமானது. முத்துறைகளின் செயற்பாடுகளினால்தான் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. முத்துறைகளில் சட்டவாக்கத்துறைக்கு பாரிய பொறுப்பு காணப்படுகிறது. அதற்கு அரசியலமைப்பின் ஊடாக சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் சுயாதீனமாகவே செயற்படுகிறது. எவருக்கும் கட்டுப்படவில்லை.

நாட்டு மக்கள் இறைவனிடம் தமது பிரச்சினைகளை முன்வைத்து அதற்கு தீர்வு கிடைக்காத காரணத்தால்தான் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நீதிமன்றத்துக்கு செல்லும் அனைவரது வழக்குகளும் அவரவருக்கு முக்கியமானது. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவு பற்றி குறிப்பிட்டிருந்தார்.

பிரதம நீதியரசர் தவிர்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது. பிரதம நீதியரசருக்கு தனியாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. குறைந்த பட்சம் இரண்டு நீதியரசர்களாவது இருக்க வேண்டும்.

புதிய நியமனங்கள் வழங்காமல் தற்போதைய நீதியரசர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் உயர் நீதிமன்றத்தை மூடும் நிலைமை ஏற்படும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த தடையுத்தரவை உயர் நீதிமன்றமே பிறப்பித்தது. இதற்கு காரணம் என்ன தங்களின் தலைமையிலான (சபாநாயகரை நோக்கி) அரசியலமைப்பு பேரவை மேல் நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பந்துல கருணாரத்னவின் பதவி உயர்வுக்கு அனுமதி வழங்கவில்லை.

பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதியரசர் பந்துல குணவர்தனவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதற்காக முழு அரச கட்டமைப்பையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. இதற்கு அரசியலமைப்பில் அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசியலமைப்பின் 41 (அ) உறுப்புரையின் 7 ஆம் அத்தியாயம் முழுமையாக மீறப்பட்டுள்ளது அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹிட்லர் ஜேர்மனி நாட்டின் அரசியலமைப்பின் சிவில் உரிமைகளை இடைநிறுத்தியதன் பின்னரே உலக மகா யுத்தம் தோற்றம் பெற்றது. இது முதலாவது தடவையாக கருதப்பட்டது. இரண்டாவது தடவையாக இலங்கையில் அரசியலமைப்பின் அதிகாரம் நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்த பிரச்சினையால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவை ஊடாக உரிய தீர்வினை காணுங்கள் என்று உங்களிடம் (சபாநாயகர்) வலியுறுத்துகிறேன் என்றார்.

No comments:

Post a Comment