(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் உயர் மற்றும் கீழ் நிலை சேவையாளர்களின் சம்பளம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்துக்கு அமைய ஒரே நிலையில் அதிகரித்துள்ளமை தவறாகும். அத்துடன் மத்திய வங்கியின் சேவையாளர்களின் ஊழியர் சேமலாப நிதியத்துக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை அவசியற்றது. இதனை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின்போது மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினோம். இதற்கமைய தினேஷ் வீரக்கொடி தலைமையிலான விசேட குழுவை ஜனாதிபதி நியமித்தார். அர்ஜூன ஹேரத், இந்திரஜித் குமாரசுவாமி, சுதர்மா கருணாரத்ன, நிஹால் பொன்சேகா, அனுஷ்க விஜேசிங்க மற்றும் கே.வி.சி. தில்ருக்ஷி ஆகியோர் இந்த குழுவின் இணை உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விடயதானம் பரந்துப்பட்டது. இவற்றை ஆராய்வதற்கு போதுமான காலவகாசம் போதாது என்று சுட்டிக்காட்டி குழுவினர் அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். மத்திய வங்கியின உயர் மற்றும் கீழ்நிலை சேவையாளர்களின் சம்பளம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளமை தவறானதாகும் என்று குழுவினர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் மத்திய வங்கியின் முகாமைத்துவ உதவியாளர், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் அரச சேவைத்துறையின் தர கட்டமைப்புக்குள்தான் உள்ளடங்குகிறார்கள். மத்திய வங்கியில் சேவையாற்றுவதால் இவர்களின் சம்பளத்தை விருப்பத்துக்கு அமைய அதிகரிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டு காலத்துக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதை குழுவினர் ஆராய்ந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு மீளாய்வுகள் செய்யப்படும்போது 5 ஆண்டுகால கூட்டு ஒப்பந்தம் என்ற நிலையில் இருந்துகொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய வங்கியின் சேவையாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் அதிகரிக்கப்பட்டமை குறித்தும் குழுவினர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். தற்போதைய நிலையில் இதனை செய்யாமல் இருந்திருக்க வேண்டும், ஆகவே ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பளம் அதிகரிக்கப்பட்டபோது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். ஐந்தாவதாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில் சம்பள அதிகரிப்பு தீர்மானத்தை முழுமையாக இடைநிறுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான தீர்மானத்தை எடுத்தால் மத்திய வங்கியின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச நிதி தொடர்பான குழுவில் இந்த பரிந்துரைகளை முழுமையாக ஆராயப்பட்டு ஐந்தாவது பரிந்துரைகளை தவிர்த்து ஏனைய பரிந்துரைகளை செயற்படுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தலைவர் என்ற ரீதியில் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தேன். ஆகவே எமது பரிந்துகைளை சபைக்கு முன்வைக்கிறேன். இதனை நிதியமைச்சுக்கு சமர்ப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment