(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை ஜனாதிபதி நியமித்த துறைசார் குழு நிரூபித்துள்ளது. ஆகவே மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் உடன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளபோதும் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதை நாங்களே முதலில் வெளிப்படுத்தினோம். அரசாங்கம் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தது. முறையற்ற வகையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு. மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை பாராளுமன்றமே அனுமதிக்க வேண்டும். மத்திய வங்கியின் முறையற்ற செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. ஆகவே மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் உடன் பதவி விலக வேண்டும்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் சேவைத்துறையினரும் சம்பள அதிகரிப்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் அதிகாரிகளது சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காக மத்திய வங்கி சட்டம் இயற்றப்பட்டது.
சுயாதீனத்துக்காக இயற்றப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி மத்திய வங்கி தனக்கு ஏற்றாட் போல் சம்பளத்தை அதிகரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும்போது அரசாங்கம் ஏன் கை பொம்மைபோல் இருந்தது என கேள்வியெழுப்பினார்.
ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச, மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு குறித்து அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் பொறுப்புண்டு, பாராளுமன்றம் தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர்தான் தன்னிச்சையான முறையில் இலங்கை வங்குரோத்து நிலையடைந்து விட்டது என்பதை அறிவித்தார். முறையற்ற வகையில் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்று கேள்வியெழுப்பினார்.
No comments:
Post a Comment