(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டில் ஐக்கிய தேசியக் கட்சி இயங்குகின்றது. கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் 875 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையிலான இலஞ்சமே என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற குறைநிரப்பு மதிப்பீட்டு தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதிக்கான ஒதுக்கீட்டு சட்ட மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் கிராமங்களின் அபிவிருத்தி மற்றும் வீதிகளின் புனரமைப்புக்காக நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அப்படியென்றால் அதனை ஜனாதிபதியின் கீழ் மாற்ற வேண்டிய அவசியமில்லையே. வீதி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் விடயதானத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தேர்தலை இலக்காகக் கொண்டே செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே இயங்குகின்றது. கட்சியின் உயர் பதவிகளில் உள்ள ருவான் விஜேவர்தன, அகிலவிராஜ் காரியவசம், ரங்கே பண்டார மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும், செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு அதிக சம்பளமும், வாகனம் உட்பட இதர வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் விவசாய அமைச்சுக்கு சென்று நல்ல வாகனத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் கடுமையாக வரிகளை விதித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிவிட்டு மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக 875 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு செய்து ஒதுக்குவதென்றால் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது ஒதுக்கியிருக்க வேண்டும். தேர்தலுக்காக அவசரமாக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தலுக்கு மூன்றரை மாதங்களே உள்ள நிலையில் அதற்கான செலவுகளுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரிச் சுமையில் இருக்கும் நேரத்தில் பதவி விலகிச் சென்ற முன்னாள் ஜனாதிபதிக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது. அவருக்கு 97 ஆயிரத்து 500 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. செயலாளர் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வாகன எரிபொருள் கொடுப்பனவான 7 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படுகின்றது. இது இலஞ்சமே. இது தவறானது. இதனை பெறுவதும் குற்றமே. தேர்தலில் தாம் விரும்பிய வகையில் செலவு செய்வதற்காகவே 875 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. இதற்கு நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment