மாவட்ட அபிவிருத்தி ஒதுக்கீடுகளின்போது எந்த பாரபட்சமும் இடம்பெறவில்லை - பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, June 20, 2024

மாவட்ட அபிவிருத்தி ஒதுக்கீடுகளின்போது எந்த பாரபட்சமும் இடம்பெறவில்லை - பிரசன்ன ரணதுங்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மாவட்ட அபிவிருத்தி ஒதுக்கீடுகள் பாரபட்சமின்றி ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை நான் பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார் .

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து, தமக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஹர்ஷன ராஜகருணா கூறுகையில், எமது பாராளுமன்ற வரலாற்றில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாகுபாடின்றி பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பெற்றுக் கொண்டனர். இந்த ஆண்டும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஏற்பாடுகள் மிகவும் அநியாயமான முறையில் செய்யப்பட்டுள்ளன, எதிர்க்கட்சியில் சிலருக்கு 100 மில்லியன் மற்றும் சிலருக்கு 50 மில்லியன் கிடைத்துள்ளது.

என்னைப் போலவே, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன உட்பட எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மையினருக்கு ஒரு சதம் கூட நிதி கிடைக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் நிதியமைச்சருடனும் பேசி பாரபட்சமின்றி சமாளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. எடுத்தவர்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். ஜனாதிபதியை இப்படிச் சங்கடப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை என்றார் .

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்து குறிப்பிடுகையில், இவர்கள் நாட்டுக்கு தவறான கருத்துக்களை வழங்குகின்றனர். பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் கிராமக் குழுக்கள் மூலம் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

ஏனெனில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒதுக்கீடு செய்கிறார்கள் என்று கடந்த அரகல போராட்டத்தின்போது எதிர்க்கட்சிகள்தான் கூறின. மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறின.

அதனால்தான் கிராமக் குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமக் குழுக்களிடமிருந்து ஆலோசனைகள் கொண்டுவரப்பட்டு, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவால் இது அங்கீகரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதனுள் உள்வாங்கப்பட்டார்கள். நான் பொறுப்புடன் சொல்கிறேன். மாவட்ட அபிவிருத்தி ஒதுக்கீடுகள் பாரபட்சமின்றி ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment