நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கு ஒத்திவைப்பு : கைத்துப்பாக்கியை சான்று பொருளாக சமர்ப்பிக்குமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, April 26, 2024

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கு ஒத்திவைப்பு : கைத்துப்பாக்கியை சான்று பொருளாக சமர்ப்பிக்குமாறு உத்தரவு

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால், வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில், நேற்று (25) நடைபெற்றது.

அதன்போது, நீதிபதியின் மெய்ப் பாதுகாவலராக அக்காலத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மன்றில் தோன்றி சாட்சியமளித்தார்.

அதன்போது, உங்கள் கைத்துப்பாக்கியை அடையாளம் காட்ட முடியுமா ? என அரச சட்டவாதி சாட்சியிடம் கேட்டபோது, “ஆம்” என பதிலளித்தார்.

ஆனால் குறித்த துப்பாக்கியை சாட்சி அடையாளம் காட்ட துப்பாக்கி மன்றில் இருந்திருக்கவில்லை. கைத்துப்பாக்கியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்ட நிலையில், அது மீள பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.

அதனை அடுத்து, பிரதான சான்று பொருள் இல்லாது, விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஒத்திவைத்தார்.

அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பெற்று , சான்று பொருளாக மன்றில் அதனை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி கட்டளையிட்டார்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment