விஜேதாச, சாரதி ஆகியோர் பதவிகளை வகிக்க தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 24, 2024

விஜேதாச, சாரதி ஆகியோர் பதவிகளை வகிக்க தடை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ மற்றும் பதில் பிரதம செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் குறித்த பதவிகளில் செயற்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் வித்தான இன்று (24) தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மே 08 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதிகள் குறித்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் கட்சியின் யாப்புக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக்க ஜயசுந்தர நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஸ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்லவெனவும், வேறு ஒரு கட்சியின் உறுப்பினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வகிப்பது கட்சி யாப்பிற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த பதவிகளுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சந்தக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இதற்கமைய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பிரதம செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால, பதில் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, பதில் தவிசாளர் விஜேதாச ராஜபக்ஸ ஆகியோருக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவையும் அறிவித்தலையும் பிறப்பித்த பிரதம மாவட்ட நீதிபதி எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment