48 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (01) வேன் ஒன்றில் கேரள கஞ்சா ஒரு தொகுதி கொண்டு செல்லப்படுவதாக புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனியப் பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் குறித்த வேனை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது வேனில் இருந்து 12 பொதிகளில் 2 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவற்றைக் கொண்டு சென்ற 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பராக்கிரமபுர, ஹட்டன், மாத்தறை, ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசங்களில் வசிக்கும் 32, 33, 45, 48 வயதுடைய மதுவரித் திணைக்கள அரச அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பகுதியில் 10 கேரள கஞ்சா பொதிகளுடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அவர்களுக்கு உதவிய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 41, 55, 64 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 22 பொதிகளில் 48 கிலோ 452 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விசாரணைகளின் பின்னர், இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் எவ்வித தராதரமும் பாராமல் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment