தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது போலி மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 பேர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இன்று (28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை வேனிலும், ஏனைய சந்தேகநபர்கள் சிறைச்சாலைகள் பஸ்ஸிலும் அழைத்து வரப்பட்டனர்.
Human Immunoglobulin மற்றும் Rituximab எனக்கூறி பதிவு செய்யப்படாத நிறுவனமொன்றிலிருந்து போலி மருந்துகளை கொள்வனவு செய்து வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், சர்ச்சைக்குரிய மருந்துகள் விநியோகிக்கப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விசாரணை நடத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் இன்று அனுமதி கோரினார்.
அத்துடன், போலி மருந்துகள் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட அறிகுறிகள், இறப்புகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் அனுமதி கோரப்பட்டது.
இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment