கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி : ஐந்து நாட்களுக்குப் பின்பு கைவிட்ட அதிகாரிகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2024

கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி : ஐந்து நாட்களுக்குப் பின்பு கைவிட்ட அதிகாரிகள்

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர பொலிஸ் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி தோல்வியில் முடிந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (22) அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன் இணைந்து வேதாளை கடலில் ரோந்து படகில் மறைந்திருந்தனர்.

அப்போது இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாக சொல்லப்படும் நாட்டுப்படகு வேதாளை நோக்கி வந்து கொண்டிருந்த போது கடலில் மறைந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நாட்டு படகை மடக்கி பிடிக்க முயன்றபோது நாட்டு படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர்.

மேலும் படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை மண்டபம் கடலோர பொலிஸ் படை முகாமுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும் படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது அதிகாரிகளை பார்த்ததால் தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை கடலில் வீசியதையும் ஒப்புக் கொண்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) வரை 4 நாட்களாக தொடர்ந்து ஸ்கூபா வீரர்கள் மற்றும் தூத்துக்குடி சேர்ந்த மீனவர்களை கொண்டு சிங்கி வலை குச்சி கடற்கரையில் தொடர்ந்து தங்கத்தை கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்தனர்.

தங்கம் கிடைக்காததால் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி அதிகாலை 6.00 மணி முதல் தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் சிங்கி வலை குச்சி மற்றும் சூடை வலைக்குச்சி கடல் பகுதிகளில் தொடர்ந்து மாலை 6.00 மணி வரை தேடினர்.

இருப்பினும் தங்கம் குறித்து எந்தவிதமான தகவல் கிடைக்காததால் தேடும் பணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குப் பின்பு நேற்று (26) மாலை கைவிட்டனர்.

மேலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த இருவரிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு படகுடன் திருப்பி அனுப்பினர்.

வேதாளை மரைக்காயர்பட்டிணம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டுப்படகு மீனவர்கள் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களால் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment