வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாலை வேளைகளில் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கல் ஓயா கீழ் பிரிவிலுள்ள மக்களுக்கு வௌ்ளம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (10) மாலை வேளையில் சேனாநாயக்க சமுத்திரம் அதிகபட்ச நீர் கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கல் ஓயா பொல்வத்த, இறக்காமம், அக்கரைப்பற்று போன்ற தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த் தேக்கத்தின் வான்கதவு ஒன்று காலை திறக்கப்பட்டுள்ளது.
லுணுகம்வெஹர நீர்த் தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் பதுளை - கொழும்பு பிரதான வீதியில் ஹாலிஎல உடுவர 07 ஆம் மைல்கல் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
பண்டாரவளை - பதுளை பிரதான வீதியின் உடுஹூல்பொத்த பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு வீதியின் மனம்பிட்டி கல்லேல்லவுக்கு இடையிலான பகுதியும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
கிராண் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பறங்கியாமடு மற்றும் பாலையடித்தோணா பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலையடித்தோணா பிரதேசத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 70 நபர்கள் பாலையடிதோனா சிறி முருகன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் காத்தான்குடி பதுரியா பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் 4 ஆம் குறிச்சி, எல்லை நகர், ஐயங்கேணி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, சவுக்கடி போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் 4 ஆம் குறிச்சியை சேர்ந்த 42 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் ஏறாவூர் காட்டு மாஞ்சோலை மணிமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 செயலகப் பிரிவுகளில் 11 செயலகப் பிரிவுகள் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 7,997 குடும்பங்களை சேர்ந்த 23,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் 11 பிரதேச செயலாளர் பிரிவின் 6 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மயிலத்தன்சேனை பிரதேசத்திற்கான தரை வழி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment