நுண்கடன் திட்டங்களால் 95 சதவீதமான பெண்கள் பாதிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, January 12, 2024

நுண்கடன் திட்டங்களால் 95 சதவீதமான பெண்கள் பாதிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நுண்கடன் திட்டங்களால் 95 சதவீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானோர் உரிய காரணிகள் ஏதுமின்றி வெறும் நுகர்வுகளுக்காக கடன் பெற்றுள்ளார்கள். நுண்கடன் திட்டங்களால் நிதி நெருக்கடியுடன் சமூக நெருக்கடியும் தற்போது தலைதூக்கியுள்ளது. இரு மாத காலத்துக்குள் 'புதிய நுண்கடன் மற்றும் கடன் கண்காணிப்பு அதிகார சபை 'ஸ்தாபிக்கப்படும். முறையற்ற வகையில் செயற்பட்டுள்ள நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையாக ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் தொடர்பிலான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நுண்கடன் திட்டங்களை கண்காணிப்பதற்கு 2021 ஆம் ஆண்டு முதல் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நுண்கடன் திட்ட நிறுவனங்கள் 120 சதவீத வட்டியல்ல, 360 சதவீத வட்டி அறவிடப்படுகிறது.

நுண்கடன் திட்டத்தால் 95 சதவீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானோர் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஏதும் இல்லாமல் வெறும் நுகர்வுக்காகவே கடன்களை பெற்றுக் கொண்டுள்ளார்கள். பெரும்பாலானோர் கடன் பத்திரத்தின் நிபந்தனைகளைகூட அறிந்திருக்கவில்லை.

நுண்கடன் திட்டங்களினால் நிதி நெருக்கடியுடன், சமூக நெருக்கடிகளும் தற்போது தோற்றம் பெற்றுள்ளன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு புதிய கடன் வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

ஆகவே கடன் இலகுவாக கிடைக்கிறது என்பதை மாத்திரம் ஆராயாமல் அதன் எதிர்விளைவுகள் பற்றியும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நுண்கடன் மற்றும் குத்தகை கடன் வழங்கல் நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் 'புதிய நுண்கடன் மற்றும் கடன் கண்காணிப்பு அதிகார சபை சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி, நிதியமைச்சு மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த சட்டமூலத்தை அடுத்த மாதத்துக்குள் சட்டமாக்க எதிர்பார்த்துள்ளோம்.

நுண்கடன் மற்றும் கடன் கண்காணிப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட கடன் வழங்கல் நிறுவனங்களும் கண்காணிக்கப்படும். முறையற்ற வகையில் செயற்பட்டுள்ள நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment