(இராஜதுரை ஹஷான்)
யுக்திய விசேட சுற்றிவளைப்பை நிறுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடும் அறிக்கைகளை பொருட்படுத்தப் போவதுமில்லை, அதற்கு பதிலளிக்கப் போவதுமில்லை. போதைப் பொருள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பேன். யுக்தியவுக்கு எதிராக செயற்படும் நபர்களின் பெயர் விபரத்தை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்களின் வகிபாகம் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு துல்லியமான புரிதலை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாவிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஊடக காட்சிப்படுத்தலுக்காக யுக்திய என்ற விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. போதைப் பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள் காட்சிப்படுத்தலா அல்லது உண்மை நோக்கமுடையதா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
இதுவரை எந்த ஒரு பெரிய, அங்கீகரிக்கப்பட்ட ஊடகமும் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக பணத்தை நம்பியிருக்கும் ஒரு சிலரே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இந்நடவடிக்கைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கும் வரையில் எனக்கு இது பற்றிய முழுமையான புரிதல் இருக்கவில்லை. ஆனால் கிராமம், நகரம் என்ற பேதமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள சாதாரண மக்களிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
பாதாள உலகத்தினாலும் போதைப் பொருள் கடத்தலினாலும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளில் சுற்றிவளைப்புகளை நடத்துவதில்லை.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்த நடவடிக்கை மூலம் பாகுபாடின்றி கடத்தலில் ஈடுபடும் பெரிய மனிதர்களை கைது செய்வதே எங்கள் நோக்கம்.
எவ்வளவுதான் பொய்ப் பிரசாரம் செய்தாலும் அதைக் கருத்தில் கொள்வதில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் வெகு சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
யுக்திய விசேட சுற்றிவளைப்புக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. போதைப் பொருள் வர்த்தகர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
யுக்திய விசேட சுற்றவளைப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து நான் அவரிடம் வினவினேன். தான் அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை என்றார்.
இந்த விசேட சுற்றிவளைப்புகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எனக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. நான் அதை பொருட்படுத்தப் போவதுமில்லை. அதற்கு பதிலளிக்கப் போவதுமில்லை. போதைப் பொருள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பேன்.
யுக்திய செயற்திட்டத்தினால் நாட்டில் தற்போது 17 சதவீதமளவில் சமூக விரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன. ஆகவே நாட்டு மக்களுக்கான செயற்பாட்டை எக்காரணிகளுக்காகவும் இடைநிறுத்தப் போவதில்லை. இந்த விசேட செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படும் முக்கிய நபர்களின் பெயர் விபரத்தை வெகுவிரைவில் வெளியிடுவேன்.
கடவுச்சீட்டு பெறக்கூடிய 51 இடங்கள் இதுவரை நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் இடங்களின் எண்ணிக்கையை 335 ஆக உயர்த்துவதே எங்கள் நோக்கம். தற்போது பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படும் அடையாள அட்டை வழங்கும் செயற்பாடுகளை போன்று கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் திறனையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment