(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சகல தரப்பினரது கோரிக்கைகளையும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது. நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியிடம் வரவு செலவுத் திட்டத்தை புகழ்ந்து விட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது.
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் எடுத்ததால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதார கொள்கை என்பதை இலக்காக கொண்டுள்ளது.
அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கம் ஏதும் கிடையாது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் யோசனைகள் குறித்து நிச்சயம் அவதானம் செலுத்துவோம். எதிர்க்கட்சிகளை புறக்கணித்து ஒருபோதும் செயற்படப் போவதில்லை. பொருளாதார மீட்சிக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment