பலஸ்தீனம் தொடர்பில் தவறான சித்தரிப்புகளால் மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - எரான் விக்கிரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

பலஸ்தீனம் தொடர்பில் தவறான சித்தரிப்புகளால் மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - எரான் விக்கிரமரத்ன

(இராஜதுரை ஹஷான்)

பலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் இலங்கையில் பலஸ்தீனம் குறித்து தவறான சித்தரிப்புகளை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பல்லாயிரம் இலங்கை பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலங்கையின் வெளிவிவகார கொள்கை பலவீனமடைந்துள்ளது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய பிளவுபடாத வெளிவிவகார கொள்கைக்கு சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்தன. அதேபோன்று சர்வதேச மட்டத்திலும் சிறந்த அங்கிகாரம் கிடைத்தது.

பொருளாதார பாதிப்பின் பின்னர் இலங்கையின் வெளிவிவகார கொள்கை பலவீனமடைந்துள்ளதை பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சீனாவின் கப்பல் விவகாரம் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் சீன விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஒரு சில விடயங்கள் மற்றும் தீர்மானம் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

சீன கப்பல் வருகை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனையுடன் ஒரு தீர்மானம் எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். சீன கப்பல் விவகாரத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது.

இலங்கையின் வெளிவிவகார கொள்கை நெகிழும் தன்மையில் காணப்படுவதால் தற்போது பூகோள தாக்கங்களுக்கு மத்தியில் பலவீனமடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் அங்கிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவிவகார கொள்கை புதுப்பிக்கப்பட வேண்டும். இலங்கையின் தற்போதைய வெளிவிவகார கொள்கை பல்லினத்தன்மையை கொண்டுள்ளது ஆரோக்கியமானதல்ல.

பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் பூகோள மட்டத்தில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். இலங்கைக்கும் மறைமுகமான தாக்கங்கள் ஏற்படும். பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் இலங்கையில் தவறான சித்தரிப்புக்களை முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது. இது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும். தற்போதைய நெருக்கடியான நிலையில் வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு இடமளிக்க கூடாது.

மத்திய கிழக்கு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் வீட்டு பணிப் பெண்களாகவும், தொழிலாளர்களாகவும் பணிபுரிகிறார்கள். பலஸ்தீனம் தொடர்பில் இலங்கையில் தவறான சித்தரிப்புக்கள் முன்னெடுக்கப்படும்போது அது இலங்கை தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment