இஸ்ரேல், ஹமாஸ் மோதல்களால் உலக பொருளாதாரம் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் : மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

இஸ்ரேல், ஹமாஸ் மோதல்களால் உலக பொருளாதாரம் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் : மனுஷ நாணயக்கார

(எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் நிலையில் அரசாங்கம் எந்த பக்கமும் சாராமல் மோதலை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே உலக நாடுகளுக்கு விடுத்து வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக உலக நாடுகளுக்கு அறிவிப்பு செய்திருக்கிறார். ஏனெனில் மோதல்களால் உலக பொருளாதாரம் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருக்கிறது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலகில் இடம்பெற்றுவரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக உலக பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை உலக நாடுகளுக்குள்ளேயே இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில் பொருளாதா ரீதியில் வீழச்சியடைந்திருக்கும் எமக்கு மிகவும் சவால்மிக்க பல விடயங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். இவ்வாறான நிலையில் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இந்த மோதல்களின்பாேது எந்த பக்கமும் இல்லாமல் மோதலை நிறுத்தி சமாதானப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.

அத்துடன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதலை சிலர் இனவாதமாக எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த மோதலால் ஏற்படுகின்ற உலக பொருளாதார பாதிப்பால் இலங்கைக்கும் அதன் தாக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே சிலர் இருக்கின்றனர். இதன் மூலம் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றே நினைக்கின்றனர். அரசியல் அறிவீனமே இதற்கு காரணமாகும்.

அத்துடன் இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் எரிபொருளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்துகொண்டு தேவையான எரிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு தெரிவித்திருக்கிறார்.

அதேபாேன்று இந்த மோதலில் நாங்கள் யார் பக்கமும் சாராமல் எப்படியாவது இதனை சமாதானப்படுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேம்.

மோதல் தொடர்ந்தால் அதன் பாதிப்பு உலக பொருளாதாரத்துக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் ஜனாதிபதி வல்லரசு நாடுகளின் தலைவர்களுக்கு இந்த மோதலை விரைவாக முடிவுக்குகொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிப்பு செய்திருக்கிறார்.

அத்துடன் இஸ்ரேலில் எமது நாட்டைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் வரை இருக்கின்றனர். அதேபோன்று காசாவில் சில குடும்பங்கள் இருக்கின்றன. அதனால் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் நாட்டுக்கு வர விரும்பினால், அதற்கு தேவையான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment