நீருக்கு வரி அறவிட்டால் அதற்கு நானே முதலாவதாக எதிர்ப்பு தெரிவிப்பேன் - நீர்பாசனத்துறை அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

நீருக்கு வரி அறவிட்டால் அதற்கு நானே முதலாவதாக எதிர்ப்பு தெரிவிப்பேன் - நீர்பாசனத்துறை அமைச்சர்

(இராஜதுரை ஹஷான்)

விவசாய நிலங்களுக்கு விடுவிக்கப்படும் நீருக்கு வரி அறவிட்டால் அதற்கு நானே முதலாவதாக எதிர்ப்பு தெரிவிப்பேன். நீர் கண்காணிப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதே தவிர நீருக்கு வரி அறவிடும் நோக்கம் கிடையாது என நீர்ப்பாசனத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பொலன்னறுவை திம்புலாகல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டுள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த தவறான அரச நிர்வாக தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுவதால் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் குறித்து தற்போது அவதானம் செலுத்த முடியாது. அடுத்த ஆண்டு ஜனநாயக அம்சங்களுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கான அரசியல் மற்றும் பொருளாதார சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சேதனப்பசளை தொடர்பில் எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் விவசாயத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது, விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

விவசாயத்துறையில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் விவசாயிகளை மீண்டும் வீதிக்கு இறக்கி போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள்.

விவசாய நிலங்களுக்கு விடுவிக்கப்படும் நீருக்கு வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது. அவ்வாறான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தால் விவசாய மாவட்டத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் நானே முதலாவதாக எதிர்ப்பு தெரிவிப்பேன்.

விவசாய நிலங்களுக்கு விடுவிக்கப்படும் நீரை ஒரு தரப்பினர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதனை கண்காணிப்பதற்கு நீர் கண்காணிப்பு ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment