ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைமையிடம் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அவர் மீண்டும் கட்சியில் இணைவதானால் கட்சியின் தலைவர் பதவி, செயலாளர் பதவி அல்லது தேசிய அமைப்பாளர் பதவி அன்றி வேறு பதவியொன்றை அவருக்கு வழங்குவதற்கு தயாரென அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சியின் உப தலைவர் பதவியை வழங்குவது பொருத்தமாகும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது ஆறு உப தலைவர்கள் பதவியில் உள்ளனர்.
இந்நிலையில் தயாசிறி ஜயசேகர அந்தப் பதவியை ஏற்க முன்வந்தால் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களின் எண்ணிக்கை ஏழாக உயரும் என்றும் அந்தக் கட்சியில் சிலர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குடும்பத்துடன் தற்போது வெளிநாடொன்றுக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment