குருநாகலிலிருந்து நிககொள்ளவுக்கு பஸ்ஸில் பயணம் செய்த 15 வயது பாடசாலை மாணவி யொருவர், அந்த பஸ் வண்டிக்குள்ளேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர், அவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை குருநாகல் கும்புக்கெட்டே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதால் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் யக்கல பிரதேச நிறுவனமொன்றின் களஞ்சியசாலை கட்டுப்பாட்டாளராக பணிபுரிபவராவார்.
23 வயதான இவருக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் கும்புக்வெவ நிககொள்ளவைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி 34 வயதுடைய வெல்கால பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். பஸ் நடத்துநரான 23 வயதுடைய நபர் பெரிய கடுநெலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மாணவி கடந்த 11 ஆம் திகதி வழமை போன்று பாடசாலை முடிந்து பஸ்ஸில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவர் பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய வடுகம பிரதேசத்தை பஸ் அண்மித்தபோது சாரதியும், நடத்துநரும் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரும் மாத்திரமே இருந்துள்ளனர்.
அவர் பஸ்ஸிலிருந்து இறங்க முற்படும்போது சந்தேகநபரான இளைஞர் அவரை இறங்கவிடாது தடுத்து பஸ் பின்பகுதி சீற்றுக்கு இழுத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அந்த சமயம் பஸ்ஸின் நடத்துநர் பஸ் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி ஜன்னல் திரைச்சீலைகளையும் முழுமையாக மூடி குறித்த நபருக்கு உறுதுணையாக செயற்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, பஸ் சாரதியான நபர் பஸ்ஸின் வானொலிப் பெட்டியின் சத்தத்தை அதிகரித்து குறித்த நபருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment