ஜனாதிபதியின் சிறப்பு தூதுக் குழுவில் விவசாயத்துறையையும், கடல் வளத்தையும் அழித்தவர்கள் : ஆற்றில் முட்டியை வீசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும் - துஷாரா இந்துனில் - News View

About Us

Add+Banner

Wednesday, September 20, 2023

demo-image

ஜனாதிபதியின் சிறப்பு தூதுக் குழுவில் விவசாயத்துறையையும், கடல் வளத்தையும் அழித்தவர்கள் : ஆற்றில் முட்டியை வீசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும் - துஷாரா இந்துனில்

thumb_large_thushara
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

விவசாயத்துறையை முழுமையாக சீரழித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுவர்தன ஆகியோர் ஜனாதிபதியின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழுவினராக சென்றுள்ளனர். ஜனாதிபதியின் செயற்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பில் சிறந்தவர்களை புறக்கணித்து கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவர்களை இணைத்துக் கொள்வது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய வன கொள்கைக்கமைய, பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக வன வளங்கள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி குறிப்பிடுகிறார்.

யானை - மனித மோதல் பிரச்சினை காலம் காலமாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை நிலையான தீர்வு எட்டப்படவில்லை. யானைகளின் வாழிடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் யானைகள் - மனிதர்கள் அண்டிய பகுதிக்குள் வாழ வேண்டிய நிலை காணப்படுகிறது.

வன வளங்கள் பாதுகாப்பு விடயத்தில் கிராம சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். ஆனால், புதிய வன கொள்கை கிராம சேவகர்களின் அதிகாரங்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே ஆற்றில் முட்டியை வீசி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் சிறப்பு தூதுக் குழுவினர் சென்றுள்ளார்கள். விவசாயத்துறையை அழித்து நாட்டு மக்களின் போசனையை முழுமையாக இல்லாதொழித்த மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நியூ டைமன், எக்பிரஸ் பேர்ல் கப்பலை நாட்டுக்குள் அழைத்து கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வழக்குகளுக்கு முன்னிலையாகிய ஆளும் தரப்பின் பின் வரிசை உறுப்பினர் தொலவத்தே ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்பு தூதுக்குழுவினராக சென்றுள்ளார்கள்.

ஆளும் தரப்பில் சிறந்தவர்கள் பலர் இருக்கும்போது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தூதுக் குழுவினராக இணைத்துக் கொண்டுள்ளமை முறையற்றது என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *