(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
வங்குரோத்து நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்காக பல நாடுகளில் அபாயகரமான போதைப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ள கஞ்சாவை நாட்டில் ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் பல நாடுகளில் அபாயகரமான போதைப் பொருள் பட்டியலுக்குள் கஞ்சா உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நாட்டில் ஊக்குவிப்பதன் ஊடாக அபாயகரமான போதைப் பொருட்களுக்கு இலங்கையர்கள் அடிமையாகமாட்டார்களா? இதன் மூலம் அரசாங்கம் எதனை எதிர்பார்க்கின்றது.
இது தொடர்பில் அரசாங்கத்திடம் ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? வங்குரோத்து நிலைமையில் இருந்து கஞ்சாவை ஊக்குவித்தா நாட்டை கட்டியெழுப்பப் போகின்றீர்கள் என்று கேட்கின்றேன் என்றார்.
இதன்போது பதிலளித்த தேசிய மருத்துவ அமைச்சர் சிசிற ஜயக்கொடி கூறுகையில், உலகின் பெரும்பாலான நாடுகள் போதைப் பொருள் பட்டியலில் உள்ளடக்கியுள்ள கஞ்சா போதைப் பொருளை உபயோகிப்பதை நாட்டில் ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
அத்துடன் களியாட்டங்களின்போது அதனை பாவிப்பதை ஊக்குவிப்பது மற்றும் அதனை போக்குவரத்து செய்வதற்கான சட்ட ரீதியான அனுமதியை வழங்குவதும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பல்ல.
அதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் காணப்படும் பிரதேசங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு மதுபான விற்பனைக்கான அனுமதியை வழங்க முடியாது.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு உரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தளங்கலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் புகையிலை மற்றும் மதுபானம் விற்பனை செய்வதை தடை செய்வது தொடர்பில் திருத்தங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment