உதவிக்கு காத்திருக்கும் காசா மக்கள் : இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 22, 2025

உதவிக்கு காத்திருக்கும் காசா மக்கள் : இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

ஐ.நா. உதவி வாகனங்கள் சிலவற்றுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்த நிலையில் காசா மக்கள் தீர்க்கமான உதவிகளை எதிர்பார்த்து நேற்று காத்திருந்தனர். எனினும் காசாவில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் தாக்குதல்களை நிறுத்தி தடையின்றி உதவிகள் செல்ல அனுமதிக்குமாறு சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்தபோதும் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (21) காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் மேலும் 52 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் பலரும் இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை உதவிகளை ஏற்றிய 93 ட்ரக் வண்டிகள் காசாவுக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் கூறியபோதும், தேவைப்படும் உதவியை விடவும் இது மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. ஆனால் உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 02 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்குள் உணவு மற்றும் அனைத்து உதவிகளும் செல்வதை இஸ்ரேல் முடக்கி வந்ததால் அங்கு பாரிய அளவில் உணவு மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. எனினும் முதல் முறை உதவிகளை காசாவுக்கு அனுப்ப அனுமதி கிடைத்ததாக ஐ.நா. நிறுவனம் கடந்த திங்களன்று கூறி இருந்தது.

நிலைமை தாங்க முடியாத கட்டத்தில் இருப்பதாக காசா நகரில் வசிக்கும் இடம்பெயர்ந்த பலஸ்தீனர் ஒருவரான 53 வயது உம் தலால் அல் மஸ்ரி குறிப்பிட்டுள்ளார். ‘எமக்கு யாரும் எதனையும் தரவில்லை. அனைவரும் உதவிக்காக காத்திருந்தபோதும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘நாம் சில ரொட்டித் துண்டுகளை செய்ய பருப்பையும் பாஸ்தாவையும் அரைக்கின்றோம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூட தயாரிக்க முடியாமல் தவிக்கிறோம்’ என்றும் அவர் கூறினார்.

காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதிக்கும் உதவியின் அளவு 2.4 மில்லியன் மக்களுக்கு போதுமானது இல்லை என்றும் ‘முற்றுகை முடிந்துவிட்டதாக பாசாங்கு செய்வது போல்’ இருப்பதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

‘மாதக் கணக்காக நீடித்த காற்று புகாத முற்றுகைக்கு பின் காசாவுக்கு அபத்தமான மிகக் குறைவான அளவு உதவியை அனுமதிப்பதற்கு இஸ்ரேல் நிர்வாகம் எடுத்த முடிவு, காசா மக்களை பட்டினி போடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை தவிர்க்கும் நோக்கமுடையதாகவே உள்ளது. உண்iமையில் அவர்கள் உயிர் பிழைக்க போராடுகின்றனர்’ என்று தெற்கு காசா நகரான கான் யூனிஸில் உள்ள அந்த அமைப்பின் அவசர ஒருங்கிணைப்பாளர் பாஸ்கேல் கொய்சார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காசாவுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்கு இஸ்ரேலுடன் உடன்பாடு ஒன்றை எட்டியதாக ஐக்கிய அரபு இராச்சியம் நேற்று அறிவித்தது. ‘முதல் கட்டத்தில் சுமார் 15,000 பொதுமக்களுக்கு தேவையான உணவு உதவிகள் வழங்கப்படும்’ என்று அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் காசாவுக்கு எப்போது இந்த உதவிகள் செல்லும் என்று உறுதி செய்யப்படவில்லை.

எவ்வாறாயினும் காசாவுக்கு உதவிகள் செல்லும் இஸ்ரேலிய எல்லைக்கடவையான கரம் அபுசலமில் நேற்று ஒன்று திரண்ட இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் உதவிகள் செல்வதை தடுக்க முயன்றுள்ளனர். இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கும் நிலையில் காசாவுக்கு உதவிகள் செல்வது அநீதியானது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரியூட் பென் ஹெயிம் என்பவர் இஸ்ரேலின் அடுட்ஸ் ஷெவா செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பை வீழ்த்தவெனக் கூறி கடந்த வார இறுதி தொடக்கம் இஸ்ரேல் காசாவில் படை நடவடிக்கையை விரிவுபடுத்தி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாக கைப்பற்றப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசாவின் ஜபலியா அல் பலத் நகரில் இருக்கும் நபான் குடும்ப வீட்டின் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு பலியானவர்களில் சிசு ஒன்றும் இருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் இஸ்ரேல் தனது நெருங்கிய நட்பு நாடுகள் உட்பட சர்வதேச ரீதியில் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. இஸ்ரேலுடனான வர்த்தக ஒத்துழைப்பை மீளாய்வு செய்வதற்கு 27 உறுப்பு நாடுகளில் பெரும்பான்மை இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளி விவகாரத் தலைவர் கஜா கலஸ் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.

‘காசாவின் நிலை ஏற்க முடியாதது என்பதை இந்த நாடுகள் பார்த்து வருகின்றன. மனிதாபிமான உதவிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக சுவீடன் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தி இருக்கும் பிரிட்டன் இஸ்ரேலிய தூதுவரையும் அழைத்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் மீது பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது அந்த நாடு முன்னெடுத்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக உள்ளது. காசாவின் நிலை கவலைக்கும் வேதனைக்கும் உரியது என்று குறிப்பிட்டிருக்கும் பாப்பரசர் 14 ஆம் லியோ, அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி அளிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை கடந்த வார இறுதியில் கட்டார் தலைநகரில் ஆரம்பமானது.

எனினும் உடன்படிக்கை ஒன்றை ஏற்பதற்கு ஹமாஸ் மறுப்பதாக நெதன்யாகு அலுவலகம் நேற்று குற்றம்சாட்டியது. இந்நிலையில் தனது மூத்த பேச்சுவார்த்தையாளர்களை திரும்ப அழைத்ததாகவும் ஆனால் குழுவின் சிலர் தொடர்ந்து டோஹாவில் தங்கி இருப்பதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment