தற்போது அதிகரித்த வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் (07) ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்ததாவது, பகல் வேலையில் வெப்பநிலை அதிகரிப்பதால் சிறுவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். இதன்போது அதிகமாக இயற்கையான நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்க வேண்டுமென விசேட சிறுவர் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
இளநீர், எலுமிச்சை, தோடை, நாரைத் தோடை, மாதுளை, கஞ்சி போன்ற குடிபானங்களை நீரிழப்புத் தன்மையைத் தவிர்ப்பதற்காக அருந்துவது அவசியம்.
அதிகரித்த வெப்பத்தால் தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, அல்லது அதிகரித்த தூக்கம் ஏற்படுவதுடன் உணவுகளின் சுவை குறைதல் போன்ற நிலைமைகளும் சிறுவர்களுக்கு ஏற்படலாமென அவர் விபரித்தார்.
இவ்வாறான காலகட்டத்தில் நீர் அருந்தாது சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லுதல், விளையாடுதல் மற்றும் வீதிகளில் சுற்றித் திரிதல் போன்றவற்றால் சகலருக்கும் நீரிழப்பு நிலை மற்றும் வெப்ப அதிர்ச்சி நிலைமைகளை எதிர்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment