வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்காதவர்கள் அனைவரும் நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டும் - கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்காதவர்கள் அனைவரும் நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டும் - கபீர் ஹாசிம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பின் வேதனையை அனைத்து தரப்பினரும் அவர்களின் சொத்துக்களுக்கமைய தாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு பிரிவினர் வேதனை அடைவதற்கும் மற்ற பிரிவினர் அதில் இருந்து மீள்வதற்கும் எங்களுக்கு அனுமதிக்க முடியாது. அத்துடன் 2021 இல் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்காதவர்கள் அனைவரும் நாட்டின் இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2021 டிசம்பர் மாதம் வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபகஷ சமர்ப்பித்தபோது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும் இல்லாவிட்டால் நாடு வங்குராேத்து அடையும் என அன்று தெரிவித்தேன். இன்று இந்த சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு தாமதித்ததன் விளைவையே இந்த நிலைக்கு காரணமாகும்.

அன்று வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து உறுப்பினர்களும் எதிர்த்தனர். ஆனால் இன்று இவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தை மறுசீரமைக்கவும் ஆதரவளிக்கின்றனர் ஆடை அணியாமலே இவர்கள் இதற்கு ஆதரவளிக்கின்றனர்.

அத்துடன் நாங்கள் தெரிவித்தது போன்று அன்று வெளிநாட்டு கடன் மறுசீமைப்புக்கு சென்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது. கோத்தாபய ராஜபக்ஷ், பீ.பீ. ஜயசுந்தர பசில் ராஜபக்ஷ், நிவாட் கப்ரால் ஆகியோரே இந்த நாட்டின் பொருளாதாரத்தை கொலை செய்தனர்.

இவர்களை பொருளாதார கொலையாளிகள் என அழைக்க முடியும். இன்று இவர்களின் வங்கி கணக்குகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அன்று வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்காத அனைவரும் இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன் இந்த கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வரவு வைக்கப்படும் 9 வீத வட்டியை அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்த முடியுமா என கேட்கிறேன்.

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதாக இருந்தால் அனைத்து துறைகளிலும் சமமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பாதகமான தீர்மானங்களை எடுப்பது அநியாயமானதாகும். வங்கி உரிமையாளர்களின் கோடிக்கணக்கான வளங்களை அரசாங்கம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

எனவே கடன் மறுசீரமைப்பின் வேதனையை நாட்டின் அனைத்து தரப்பினரும் அவர்களின் சொத்துக்கமைய ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு தரப்பினர் வேதனை அடைவதற்கும் மற்றவர்கள் அதில் இருந்து மீள்வதற்கும் எங்களுக்கு அனுமதிக்க முடியாது. அது நியாயம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment