(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியே அரசாங்கம் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறது. நாட்டை வங்குராேத்து அடையச் செய்தவர்களே தற்போது நாட்டை கட்டியெழுப்புவதாக தெரிவித்து வருகின்றனர். இது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் ஏதாவது ஒரு தேர்தலுக்கு சென்று மக்கள் ஆணையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை ஆட்சி செய்துவந்த அரசாங்கங்கள் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றிருக்கிறது. ஆனால் பாராளுமன்ற விவாதம் நடத்தியதில்லை. ஏனெனில் அது அரசாங்கத்தின் கொள்கை. அரசாங்கத்தின் கொள்கையை பாராளுமன்றத்தில் அனுமதிக்கத் தேவையில்லை. அதனால் தற்போது அரசாங்கம் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகிறது.
மேலும் அரசாங்கம் கடன் செலுத்துவதை நிறுத்தியுள்ளது. கடன் செலுத்த ஆரம்பித்தால் கடந்த வருடத்தைவிட மோசமான நிலைக்கு நாடு செல்லும்.
கோத்தாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் வருடத்துக்கு 6 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டி இருந்தது. இந்த கடனை 2029 வரை செலுத்த வேண்டிவரும் என தற்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் 2032 வரை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது.
அத்துடன் அரசாங்கம் கடன் செலுத்துவதை தாமதப்படுத்தி இருக்கிறதே தவிர, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு செயயும்போது அது பொருளாதாரத்துக்கு பாரிய சுமையை ஏற்டுத்துகிறது. அந்த சுமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். ஆனால் அரசாங்கம் இந்த சுமையை ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதிய அப்பாவி மக்கள் மீது சுமத்தியிருக்கிறது.
அதனால் நாட்டை வங்குராேத்து அடையச் செய்தவர்கள் தற்போது நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். அது சாத்தியமில்லை. அதே நேரம் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. அதனால் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் அல்லது ஏதாவது ஒரு தேர்தலை மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் அரசாங்கம் தேர்தலுக்கு சென்று மக்கள் ஆணையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment