பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 21 வயதான யுவதியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு நாளையதினம் (15) பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எவ்வாறாயினும், யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி, மரணத்தை ஏற்படுத்தவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்த விடயத்தை விஞ்ஞானபூர்வமாக சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க குறித்த விசாரணைக்குழுவிற்கு இயலுமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.
குறித்த ஊசி செலுத்தப்பட்ட மேலும் 12 பேர் தற்போதும் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்.
21 வயதான சமோதி சந்தீபனி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த வாரம் கெட்டப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, கடந்த திங்கட்கிழமை காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அவருக்கு ஊசி ஏற்றபட்டதன் பின்னர் நிலைமை மோசமடைந்து அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மருந்துகள் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையை கூட்டி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லான கூறுகிறார்.
இந்திய கடன் உதவியின் கீழ் தரம் குறைந்த நிறுவனங்களில் இருந்து தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வதே இந்த நிலைக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், பாணந்துறை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment