ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு அநீதி ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு அநீதி ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடன் மறுசீரமைப்பின்போது 25 இலட்சம் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவர்களுக்கு அநீதி ஏற்படுவதை தவிர்த்து கடன் மறுசீரமைப்புக்கு செல்ல முடியுமானால் அது தொடர்பில் கலந்துரையாட முடியும் என ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்லாவிட்டால் நாடு வங்குராேத்து நிலைக்கு செல்லும் என நாங்கள் 2021 வரவு செலவு திட்டத்தின்போது தெரிவித்திருந்தோம்.

அதேநேரம் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும், அவ்வாறு தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொண்டே ஆக வேண்டும் என்றால் கடன் தவணை காலத்தை நீடித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே நாங்கள் அன்று தெரிவித்திருநதோம். ஆனால் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை.

மேலும் கடன் மறுசீரமைப்பின்போது 25 இலட்சம் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதநேரம் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று அனுமதிக்கப்பட்டதுடன் இதனை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு சமர்ப்பித்து கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கி 21 நாட்களுக்கு பின்னரே அதற்கு இணக்கம் தெரிவிப்பதா இல்லையா என தீர்மானிக்கும். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு, கணக்கு வழக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் பொறுப்பு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கிறது

அத்துடன் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிப்பதா இல்லையா என தீர்மானம் மேற்கொள்வது யார்.? 25 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஊழியர் சேமலாப நிதியத்தில் அதன் நிர்வாக சபையில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. நிதிச் சபையின் உறுப்பினர்களே இதில் இருக்கின்றனர். அதனால் நிதிச் சபையில் இருப்பவர்கள் இந்த 25 இலட்சம் உறுப்பினர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் கவனத்திற் கொண்டு செயற்படுவார்களா என்ற கேள்வி எழுகிறது.

அதேபோன்று ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 9 வீத வட்டி கிடைக்குமா? அதனை சட்டமாக்க முடியுமா என நாங்கள் நிதிச் சபையில் கேள்வி எழுப்பினோம். அது அநீதியான கோரிக்கை அல்ல.

அத்துடன் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மாத்திரம் குரல் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

அவர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டால் அவர்களுக்கு வட்டி சேர்க்கப்பட்டே ஆக வேண்டும். அதனால் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு ஏற்படும் அநீதியை இல்லாமல் செய்து, இது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமானால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்றார்.

No comments:

Post a Comment