(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும். கடன் பெற்ற அரசாங்கங்களின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள். கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தவிர்த்து சிறந்த மாற்றுத்திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அதனை விரைவாக செயற்படுத்த தயார் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது, வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியபோது வெஸ்மினிஸ்டர் முறைமைக்கு அமைய அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசாங்கத்தை பொறுப்பேற்காத காரணத்தால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து தோற்றுவித்தோம்.
2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் நீடித்திருந்தது. நாளாந்தம் பல மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில் 97 சதவீதமாக காணப்பட்ட பண வீக்கத்தை 2023 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். தற்போது பண வீக்கம் கட்டம் கட்டமாக குறைவடைந்து செல்கிறது.
பொருளாதார பாதிப்பு ஓரிரு நாட்களில் இடம்பெற்றதொன்றல்ல 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது ஆலோசனைக்கு அமைய வரிச் சலுகை வழங்கினார். உரம் தொடர்பில் தவறான தீர்மானத்தை எடுத்தார் இதனால் பொருளாதாரம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது.
75 ஆண்டு கால ஆட்சியாளர்கள் திருடர்கள், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள் என அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. டி.எஸ். சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் மீது ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் குறிப்பிடுங்கள் என வினவினால் எவருக்கும் பதிலளிக்க முடியாது.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மூடிய பொருளாதார கொள்கையால் நாடு தன்னிறைவடைந்தது. திறைசேரியின் கையிருப்பு பலப்படுத்தப்பட்டது. மூடிய பொருளாதார திட்டத்தை விமர்சித்து ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்கு வந்தார் இறுதியில் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொண்டது.
மூடிய பொருளாதார கொள்கையில் இருந்து விலகி இலங்கை திறந்த பொருளாதார கொள்கைக்கு சென்றதால் ஏற்பட்ட விளைவை கருத்திற் கொண்டு இந்தியா மூடிய பொருளாதார கொள்கையை தொடர்ந்து அமுல்படுத்தி தாமதப்படுத்தப்பட்ட நிலையில் திறந்த பொருளாதார கொள்கையின் அம்சங்களை செயற்படுத்தியது.
காலத்துக்காலம் பொருளாதார கொள்கையை அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைத்ததால் நாடு என்ற ரீதியில் வீழ்ச்சியடைந்தோம். இதனால் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியிருந்தது. தற்போது வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் 17 ஆவது தடவையாக ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளோம்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும். ரணில், ராஜபக்ஷ, மைத்திரி என தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று எதிர்க்கட்சி பக்கமும், ஆளும் தரப்பு பக்கமும் உள்ளார்கள். ஆகவே எவரும் பொறுப்பில் இருந்து விலக முடியாது.
கடன் மறுசீரமைப்பைத் தவிர சிறந்த மாற்றுத்திட்டம் ஏதும் இருந்தால் எதிர்க்கட்சிகள் தாராளமாக முன்வைக்கலாம். அவ்வாறான யோசனைகளை நிதியமைச்சரான ஜனாதிபதியிடம் முன்வைத்து மறுகணமே கடன் மறுசீரமைப்பு யோசனையை மாற்றியமைக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment