மக்களின் அவலங்களுக்கு தூபமிடுபவர்கள் ஆசை காட்டி தமது எவலாளர்களை தூண்டி விடுகிறார்கள். அதன் மூலம் உயர்ந்த இலட்சிய கோபுரங்களை உடைத்து வீழ்த்தி குட்டிசுவர்களாக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். தம்மால் முடியாததை அடுத்தவன் செய்தால் அதைத்தடுக்க தகிடு தித்தி தாளம் போடுவது தமிழ் தேசியம் அல்ல. நாங்கள் தமிழ் தேசத்தின் விடியலுக்காக நீதியான வழியில் இரத்தமே சிந்தியவர்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் சனிக்கிழமை (01.07.2023) நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் கோசமாக ஒரு போதும் உச்சரித்தவர்கள் அல்ல. நாங்கள் அரசியல் யதார்த்த சூழலை உணர்ந்து தேசிய நல்லிணக்க பாதையில் வெளிப்படையாகவே அணிவகுப்பவர்கள், எக்காலத்திலும் அரசுடன் பின் கதவு தட்டி பேசியவர்கள் அல்ல. அல்லது தென்னிலங்கையை தூண்டி விட்டு அதில் குளிர்காய, தமிழர் தேசத்தில் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்களும் அல்ல.
மாகாண சபை முறைமையில் இருந்து முன்னோக்கி செல்வதே நடைமுறை சாத்தியம் என்ற எமது தீர்க்கதரிசனத்தை ஏற்றுக் கொண்டது போல். அதை ஏற்க மாட்டோம் ஆனாலும் அதில் பங்கெடுப்போம் என்ற மறைமுக ஆதரவு போல். எல்லா விடயங்களிலும் இதய சுத்தியோடு செயலாற்ற முன்வாருங்கள். விளக்கங்களை கோரும் மக்களுக்கு குழப்பங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள்.
சில தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் விளக்கமில்லாததும், விளக்கமிருந்தும் விளங்காதது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள், தங்களது வாழ்வாதாரங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், மக்களது வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது மக்களுக்கு நன்மைகள் கிட்டும்போது அதைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்துக் கொண்டு, அரசியல் செய்வதும், தமது பிழைப்புகளை முன்னெடுப்பதும் இவர்களது நோக்கமாக இருக்கின்றது.
நாங்கள் முறையான ஆய்வுகளுக்கூடாகவே இத்தகைய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அன்றி, தான்தோன்றித் தனமாக எதையும் முன்னெடுப்பதில்லை. வெளிப்படையான தன்மை கொண்டவையாகவே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஒருவர் கடலட்டை, இறால், நண்டு, கடல் பாசி, சிப்பி போன்ற நீர் வேளாண்மைக் கைத்தொழில்களை மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் அவர், அத்தொழிலினை மேற்கொள்கின்ற பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரிடம் அது சார்ந்த கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் தேசிய நீர் வாழ் உயிரின அபிவிருத்தி முகவர் நிலையம் (நெக்டா), கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அடங்கலாக கள ஆய்வு நடத்தப்பட்டு, கடற்றொழில் அமைச்சு அதன் சாதக, பாதகங்ளை ஆய்வு செய்த பின்னரே அவருக்கு குறித்த நீர் வேளாண்மைக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
இதனை விளங்கிக் கொள்ளாமல் சுயலாப அரசியலுக்காக சிலர் கூக்குரல் இடுவது தொடர்பில் எமது மக்களும் தமிழ் ஊடகங்களும் விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
ஆக, எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களை நாம் வழங்கும் போது, அதனை எதிர்ப்பவர்கள், இந்திய இழுவை மடி வலைப் படகுகளுக்கு எதிராக வெளிப்படையானதும், ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.
அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் அனைவரதும் ஒத்துழைப்புகள் கிடைக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment