உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்தபோது அதிகாரத்தை பகிர்ந்த முதல் ஜனாதிபதி நான்தான் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்கு கேட்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையை ஒழிப்போம் என பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனாலும் எந்த ஜனாதிபதிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதனை நீக்குவதற்கு விரும்பவில்லை.
நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என வாக்குறுதி வழங்கினேன் வழங்கியபடி நிறைவேற்றினேன்.
19ஆவது திருத்தத்தின் மூலம் எனக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றம் அமைச்சரவை திணைக்களங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கு பகிர்ந்து வழங்கினேன்.
அரசியலமைப்பை 20 தடவைகள் திருத்தம் செய்ததில் ஏழு தடவை நிறைவேற்று அதிகாரத்தை அதிகரிப்பதற்காக திருத்தம் செய்தார்கள் தற்போது 21 ஆவது தடவையாக திருத்தம் செய்துள்ளனர்.
உலகில் நான் அறிந்த வரை எந்த தலைவர்களும் ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி ஒருவர் தனது அதிகாரத்தை குறைத்தது கிடையாது.
ஆட்சி அதிகாரம் ஒருவரிடத்தில் காணப்பட்டால் அது ஜனநாயகம் அல்ல. ஆதலால் ஜனநாயகம் சார்ந்த அனைத்து துறைகளிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக எனது அதிகாரத்தை பகிர்ந்து வழங்கினேன்.
எனது 55 வருட கால அரசியல் வாழ்க்கையில் 35 வருடமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நிலையில் 25 வருடங்களாக அமைச்சராக இருந்துள்ளேன்.
எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை அனைத்து மக்களும் சுதந்திரமாக ஜனநாயக கருத்துக்களை முன்வைக்கும் தேசமாக மாற்றியதுடன் ஜனநாயக போராட்டங்களுக்கு தீர்வுகளையும் முன்வைத்தோம்.
ஆகவே யாழ்ப்பாணத்தில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களை சந்தித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதோடு எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானங்களில் உங்களின் பங்காளிப்பும் இணைத்துக் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அதிபர் லதீசன், யாழ் வணிகர் கழகத்தின் உப தலைவர் ஜெயசேகரம், யாழ். மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திர குமாரன், வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகன்தாஸ், யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, நொதேன் தனியார் வைத்தியசாலைப் பணிப்பாளர் கேசவராஜா, தொழிலதிபர் ஈ.எஸ்.பி நாகரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment