நாட்டை சீர்படுத்தும் சிறந்த சிங்களத் தலைவர் ஒருவர்கூட இல்லை என்பதை காலம் எடுத்துக்காட்டியுள்ளது : உத்தரவாதம் வழங்குவது அவல் சாப்பிடுவது போல் இலகுவானதொரு விடயம் என்கிறார் சிறிதரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

நாட்டை சீர்படுத்தும் சிறந்த சிங்களத் தலைவர் ஒருவர்கூட இல்லை என்பதை காலம் எடுத்துக்காட்டியுள்ளது : உத்தரவாதம் வழங்குவது அவல் சாப்பிடுவது போல் இலகுவானதொரு விடயம் என்கிறார் சிறிதரன்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

சம்பள உயர்வுக்காக போராடும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றையும் அரசாங்கம் விட்டுவைக்கவில்லை. நடுத்தர மக்களின் எதிர்கால சேமிப்பை கொள்ளையடிக்கவில்லை என்பதை அரசாங்கத்தால் வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிட முடியுமா? இந்த நாட்டுக்கு சிறந்த சித்தாந்தம் என்பதொன்று கிடையாது. நாட்டை சீர்படுத்தும் சிறந்த சிங்களத் தலைவர் ஒருவர்கூட இல்லை என்பதை காலம் எடுத்துக்காட்டியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் பொருளாதாரத்தின் படுவீழ்ச்சி, நடுத்தர மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க போகிறது என்று குறிப்பிட்ட விடயங்களை அரசாங்கம் இன்று பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பல உத்தரவாதங்களை வார்த்தைகளாக வழங்குகிறார்கள். இந்த நாட்டில் உத்தரவாதம் வழங்குவது கடந்த 100 ஆண்டு காலமாக அவல் சாப்பிடுவது போல் இலகுவானதொரு விடயமாகவே உள்ளது. இலகுவாக குறிப்பிடுவார்கள். ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள பின்னணியில் நாட்டில் எங்கும் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை. 13 பிளஸ் மற்றும் சமஷ்டி என்று வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே மத்திய வங்கியின் ஆளுநரின் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே அமையும்.

மலைய அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வுக்காக போராடினார்கள், இன்றும் போராடுகிறார்கள். ஆனால் 600 ரூபாய்க்கு மேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. தற்போதைய வாழ்வாதார செலவுகளுக்கு மத்தியில் 600 ரூபாவை கொண்டு ஒரு குடும்பத்தால் எவ்வாறு வாழ முடியும்.

600 ரூபாய் சம்பளம் பெறும் தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியத்தையும் கொள்ளையடிப்பது மிக மோசமானது. நாட்டில் உள்ள ஏழைகளின் சேமிப்பை கொள்ளையடித்து ஆட்சி செய்யும் நிலை ஏன் தோற்றம் பெற்றது என்பதற்கான காரணத்தை அரச தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை கொள்ளையடிக்கவில்லை, கை வைக்கவில்லை என அரசாங்கத்தால் வெளிப்படையாக குறிப்பிட முடியுமா.? மொத்த சனத் தொகையில் 25 இலட்ச மக்களின் எதிர்காலத்தில் கை வைத்துள்ளீர்கள்.

சிங்கள சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். கடந்த 30 ஆண்டு காலங்களில் தமிழர்கள் போர் என்ற பெயரில் அழிக்கப்பட்டார்கள். போரின் ஊடாக அரச தலைவர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் முதலைகள் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள்.

மோசடி செய்யப்பட்ட சொத்துக்கள் உகண்டா உட்பட வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் ஏழைகளாகவே வாழ்கிறார்கள். இவ்வாறு ஏழைகளின் இறுதி சேமிப்பையும் அரசாங்கம் விட்டு வைக்கவில்லை என்பதை சிந்திக்கவில்லை.

ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரச தலைவர்கள் நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை. 1978 ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது, தன்னிறைவு அடைவோம் என்று குறிப்பிட்டீர்கள். இன்று என்ன நேர்ந்துள்ளது.மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் நிலை வந்துள்ளது.

மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள், யுத்தத்தில் கொள்ளையடித்தவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளார்கள். மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க நினைக்கிறார்களே தவிர நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரச தலைவர்கள் அவதானம் செலுத்தவில்லை. பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முன் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண ஏன் அவதானம் செலுத்த முடியாது.

நாட்டின் எதிர்கால தலைமுறையினர் குறித்து அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது. அரசாங்கத்திடம் சித்தாந்த அறிவு இல்லை. நாட்டை சீர்படுத்தும் சிறந்த தலைவர் சிங்களவர்களிடம் இல்லை என்பதையே காலம் சொல்கிறது. ஏனைய இனங்களையும் இணைத்துக் கொண்டு சிறந்த முறையில் முன்னோக்கி செல்லும் தலைவரை இன்றும் ஏன் அடையாளம் காணவில்லை.

புத்தர் விகாரை கட்ட பணம் உள்ளது. தமிழர்களின் நிலங்களை அபகரிக்க காசு உள்ளது. ஆனால் மக்களுக்கு செலவு செய்ய காசு இல்லை. வடக்கு கிழக்கில் அமர்த்தும் படைகளுக்கான நிதி ஒதுக்கை மட்டுப்படுத்துங்கள். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தற்துணிவுடன் செயற்படுத்துங்கள் என்றார்.

No comments:

Post a Comment