ஜுனில் பண வீக்கம் 12 சதவீதமாக வீழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

ஜுனில் பண வீக்கம் 12 சதவீதமாக வீழ்ச்சி

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மே மாதம் 25.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பண வீக்கம், கடந்த ஜுன் மாதம் 12 சதவீதமாக வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, கடந்த மே மாதத்தில் 21.5 சதவீதமாகப் பதிவான உணவுப் பண வீக்கம் ஜுனில் 4.1 சதவீதமாகவும், மே மாதம் 27 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பண வீக்கம் ஜுன் மாதம் 16.2 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

இரு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாகக் கடந்த ஜுனில் உணவுப் பண வீக்கம் ஒற்றை இலக்கப் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜுன் மாதம் 0.02 சதவீதமாகப் பதிவானது.

இச்சிறிய மாதாந்த மாற்றத்துக்கு கடந்த மாதம் உணவுப் பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.41 சதவீத விலை அதிகரிப்புக்களை உணவல்லாப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட (-0.39) சதவீத விலை வீழ்ச்சிகள் எதிரீடு செய்தமை காரணமாக அமைந்தது.

அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பண வீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப் பண வீக்கம் கடந்த மே மாதத்தில் 20.3 சதவீதத்திலிருந்து ஜுனில் 9.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பண வீக்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில், பண வீக்கமானது இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில் ஒற்றை இலக்கப் பெறுமதியை அடைந்து, பண வீக்க வீழ்ச்சி செயன்முறை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.

No comments:

Post a Comment