(எம்.ஆர்.எம்.வசீம்)
செப்டம்பர் மாதத்துக்குள் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதனால் எதிர்வரும் 12 வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் சர்வதேச நாடுகளில் உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நாடாக இலங்கை மாறும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை எதிர்வரும் செப்டம்பர் இறுதியாகும்போது அந்த நிலையில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருக்கிறார். அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறார்.
உலக நாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார். எமது நாட்டின் மொத்த கடன் தொகை 83 பில்லியன் டொலராகும். கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கடன் வழங்கிய நாடுகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடி வருகிறார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள வெளிநாட்டு கடன்களை மாத்திரம் மறுசீரமைப்பதன் மூலம் நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது, தேசிய கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
அதன் பிரகாரமே தேசிய கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக குறித்த பிரேரணை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்த பிரேரணைக்கு 66 பேர் எதிராக வாக்களித்திருந்தனர். இவர்கள் தொடர்பில் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை மக்களின் கைகளிலேயே இருக்கிறது. ஏனெனில் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் மக்களின் பிரதிநிதிகளாகும். அதனால் நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்துக்கு எதிராக செயற்பட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக மக்கள் செயற்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டாலே நாட்டை அபிவிருத்தி நோக்கி முன்னெடுத்துச் செல்லலாம். நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
மேலும், பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதேநேரம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி தற்போது ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் எதிர்வரும் 12 வருடங்களுக்கு நாட்டின் ஆட்சியை ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் வழங்கினால் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதுடன் உலக நாடுகளில் தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நாடாக இலங்கையை ரணில் விக்ரமசிங்க மாற்றியமைப்பார்.
அதனால் மக்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது. ஜப்பானின் முன்னேற்றத்துக்கு அந்த மக்களின் அர்ப்பணிப்பே காரணமாகும். அதனால் ஜப்பான் மக்களை முன்மாதிரியாகக் கொண்டு நாட்டு மக்கள் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment