(லியோ நிரோஷ தர்ஷன்)
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஆளும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார மீட்சியை கருத்தில் கொண்டு மிகவும் சாதகமான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார். எனவே அவருக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்குவது இன்றியமையாதது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களை புதன்கிழமை (14) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தித்து எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சந்திப்பில் கலந்துகொண்ட ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு வழங்குவதை உறுதி செய்தனர்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான, பிரதமர் தினேஷ் குணவர்தன, பஷில் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள பஷில் ராஜபக்ஷ, ஸ்ரீலஹ்கா பொதுஜன பெரமுன கூட்டணியுடன் இணைந்து செயல்படுகின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதேச அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் ஒரு சில கொள்கை விடயங்களை விமர்சித்தாலும், அவை எதுவும் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவுக்கு தாக்கம் செலுத்தாது.
மேலும் எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். மாதத்திற்கு ஒருமுறையேனும் ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவது எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு நன்மையளிக்கும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொதுஜன பெரமுன மற்றும் தான் கடந்த அரசியல் வரலாற்றில் பல்வேறு ஜனாதிபதிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலமையிலான அரசின் செயல்திறன் மிக்க நிர்வாக குழுவை போன்று முன்பிருந்ததில்லை என்றும் பஷில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் பணிகள் குறித்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் கட்சி என்ற வகையில் நாட்டிற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் மீது ஆழமான நம்பிக்கை எமக்குள்ளது. எனவே தொடர்ந்தும் ஆதரவை வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள ஏனைய கூட்டணி கட்சிகளும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment