உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு குறித்து கனடா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் இச்செயன்முறைக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்களின் விளைவாகத் தமது அன்புக்குரியவர்களை இழந்த சிறுபான்மையினத் தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தவறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவரான சுமந்திரனின் கருத்து தொடர்பில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிப்பு மற்றும் அது குறித்த சட்டவரைபுத் தயாரிப்பு ஆகியவற்றில் முன்நின்று செயற்பட்டுவருபவர் என்ற ரீதியில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
சுமந்திரன் ஒரு தனி நபர் என்றும், எனவே அவரது கருத்துக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு தீர்மானத்துக்கும் வர முடியாது என்றும் சுட்டிக்காட்டிய விஜயதாஸ ராஜபக்ஷ, இவ்விடயம் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூறுகின்றதே என்று வினவியபோது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் இதுபற்றிக் கலந்துரையாடியதாகப் பதிலளித்தார்.
இருப்பினும் கடந்த மாதம் ஜனாதிபதிக்கும் வட,, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விரிவாகவும், ஆழமாகவும் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்டவரைபு குறித்து கனடா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றுடன் நிகழ்நிலை முறைமையில் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் இச்செயன்முறைக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்த விஜயதாஸ ராஜபக்ஷவிடம் அப்புலம்பெயர் அமைப்புக்களின் விபரங்களைக் கோரியபோதிலும் அதனை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.
மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு குறித்து வெகுவிரைவில் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என்றும், அச்சட்டவரைபு தொடர்பில் அபிப்பிராயம் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment