மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள் - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, June 5, 2023

மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள் - திஸ்ஸ அத்தநாயக்க

(எம்.மனோசித்ரா)

தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு ஜனாதிபதியால் தனித்து எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது. எனவே தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை அறிவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரமான தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்துள்ளது.

தேர்தலை நடத்த முடியாது என்பதை ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியாது. மக்கள் தேர்தலை விரும்புகின்றனரா இல்லையா என்பதை அறிய வேண்டுமாயின் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனை விடுத்து ஜனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு இடமளிக்க முடியாது. 

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இது தொடர்பில் தற்போது ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டுள்ளமை பொறுத்தமற்றது.

ஜனாதிபதித் தேர்தலை ஒரு வருடத்துக்கு முன்னரே நடத்துவதற்காக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

எனவே ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளையேனும் எடுக்க வேண்டும். எதற்காக தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கால வரையறையின்றி காலம் தாழ்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் உறுப்பினர்களுக்கு மீண்டும் அதிகாரத்தையும், சிறப்புரிமைகளையும் வழங்குதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

எனினும் தேர்தல் ஆணைக்குழு அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. திட்டமிட்டு தேர்தலைக் காலம் தாழ்த்தி, அரசியல் நியமனங்களை வழங்க முற்படுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment