ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்கிறார் ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, June 5, 2023

ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்கிறார் ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் காணப்படுமாயின் அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம். வலையொளி (யூடியூப்) வலைத்தளம் ஊடாக முறையற்ற வகையில் செயற்படும் தரப்பினரை கண்காணிக்க பிரத்தியேக சட்டம் இயற்றப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் காணப்படுமாயின் அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.

அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோமே தவிர தவறான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை.

அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

குறிப்பாக வலையொளி (யூடியுப்) வலைத்தளத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக ஒரு தரப்பினர் தேசிய நல்லிணக்கம், மத சகவாழ்வு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கம், மத சகவாழ்வு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கண்காணிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ள காரணத்துக்காக விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது என்றார்.

No comments:

Post a Comment